உருளாய மோவாது கூறிற் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

 

உருள் ஆயம் ஓவாது கூறின்-ஒருவன் உருள்கின்ற கவற்றொடு சேர்த்த பணையத்தை இடைவிடாது சொல்லிச் சூதாடுவானாயின்; பொருள் ஆயம் போய்ப் புறமே படும்-அவன் தேடிய செல்வமும் பொருள்வருவாயும் அவனை விட்டு நீங்கி எதிரிகளிடம் போய்ச் சேரும்.

'ஆயம்' இரண்டனுள் முன்னது சூதாட்டைக் குறித்தது; தாயம் என்னும் சொல்லின் திரிபு : பின்னது வருவாயைக் குறித்தது; வா என்னும் சொல்லினின்று திரிந்தது. 'உருளாயம்' வினைத்தொகை. 'பொருளாயம்' உம்மைத்தொகை. ஆயம் என்னும் சூதாட்டுப் பெயர் உருள் என்னும் அடையால் சூதாட்டுக் கருவியையும், கூறின் என்னும் வினையால் பணையத்தையும், குறித்து இருமடியாகு பெயராயிற்று. பணையம் பந்தயப் பொருள்; வட்டினியென்றும் பெயர்பெறும். ஒவ்வொரு சூதாட்டத்திலும் பணையங் கூறிய பின்னரே காய்களைப் பாய்ச்சுதலால், அக் கூற்றுக் கருவியொடு சார்த்திக் கூறப்பட்டது. 'போஒய், இசைநிறையளபெடை. பொருள்களையெல்லாம் பணையமாக வைத்துத் தோற்றபின், அவற்றின் வருவாய்களையும் வைப்பது வழக்கமாதலின், 'பொருளாயம்......புறமே படும்' என்றார். " 'ஆயம்' வடமொழித் திரிசொல்." என்பது பரிமேலழகர் நச்சுக் கூற்று. ஏகாரம் பிரிநிலை.