இழத்தொறூஉங் காதலிக்குஞ் சூதேபோற் றுன்ப
முழத்தொறூஉங் காதற் றுயிர்.

 

இழத்தொறும் காதலிக்கும் சூதேபோல்-பணையம் வைத்த பொருள்களை இழக்குந்தோறும் அவற்றை  மீட்டற் பொருட்டும் மேற்கொண்டு ஈட்டற்பொருட்டும் சூதின் மேற்பற்று வைக்குஞ் சூதன்போன்றே; உயிர் துன்பம் உழத்தொறும் காதற்று-ஆதன்(ஆன்மா) உடம்பால் மூவழித் துன்பங்களையும் பட்டு வருந்துந்தோறும் அதன்மேற் பற்றுவைக்குந் தன்மையதாம்.

உயிர்வினையை உவமமாகவும் சூதன் வினையைப் பொருளாகவுங் கூறுவதே அதிகார முறையாயினும், முன்னதன் முதன்மை பற்றி மாற்றிக் கூறினார். இங்ஙனம் இருவகைக் காதலையுங் கூறியது பெரும்பான்மைபற்றியாகலின், உடம்பை வெறுத்துத் துறவுபூணுவதும் சூதை வெறுத்து நல்வழிப்படுத்துவதும் சிறுபான்மை யுண்டென வறிக. துன்பப்படுந்தொறும் உடம்பின்மேற் பற்றுவைப்பது எதிர்காலத்திலேனும் இன்பநுகரலாம் என்னும் நம்பாசைபற்றி. 'தொறூஉம்' ஈரிடத்தும் இன்னிசையளபெடை. 'சூது' ஆகு பொருளது; உயிருக் கொத்தவன் சூதனேயாதலின். சூதன் சூதாடுவோன். ஏகாரம் பிரிநிலை.