இளிவரின் வாழாத மான முடையா
ரொளிதொழு தேத்து முலகு.

 

இளிவரின் வாழாத மானம் உடையார் ஒளி - தமக்கோ ரிழிவுவந்தவிடத்து அதைத் தாங்காது உடனே உயிர் நீத்த மானியரின் புகழுடம்பை; உலகு தொழுது ஏத்தும் - உலகத்தார் கும்பிட்டு வழுத்துவர்.

இம்மைப் புகழை ஒளி யென்னும் வழக்குப்பற்றி மானங்காக்க உயிர் நீத்தவரின் புகழுடம்மை 'ஒளி' என்றார். மறத்துறையிலும், மதத்துறையிலும் போன்றே, பண்பாட்டுத் துறையிலும் தம் கொள்கைபற்றி உயிர் நீத்தவர் தெய்வமாகத் தொழப்பெறுவர் என்பது கருத்து. தொழுதேத்துதல் என்னும் வினைக்கேற்ப, ஒளி என்பது ஒளிவடிவு(புகழுடம்பு) என உரைக்கப்பட்டது. 'உலகு; இடவாகு பெயர். இந்நான்கு குறளாலும் மானங்காக்க உயிர் நீத்தலின் சிறப்புக் கூறப்பட்டது.