அற்ற மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

 

பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார் பிறர் மானச் செய்திகளையே கூறி அவமானச் செய்திகளை மறைத்து விடுவர்; சிறுமை குற்றமே கூறிவிடும் - மற்றச் சிறுமை யுடை யாரோ பிறர் குணத்தையெல்லாம் மறைத்துக் குற்றங்களையே கூறிவிடுவர்.

இங்கும் மாந்தர் செயல்கள் அவர் பண்பின்மேல் எற்றிக்கூறப்பட்டன. மறைத்தலும் கூறுதலும் ஏனையிடத்தும் இயைந்தன. 'தான்' அசைநிலை. ஏகாரம் பிரிநிலை, இம்முன்று குறளும் வேற்றுமையணி கொண்டு இருசாரார் செயலையும் ஒருங்கு கூறின.