பக்கம் எண் :

10

தண்டமாவது, அவ்வொழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழீஇயினாரை, அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்ப நாடி அதற்குத்தக ஒறுத்தல்.

இவற்றுள் வழக்கும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தவாவதுஅல்லது, ஒழுக்கம்போல மக்கள் உயிர்க்கு உறுதி பயத்தல் சிறப்பில ஆகலானும், அவைதாம் நூலானே அன்றி உணர்வு மிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டு தெய்வப்புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதுதான் நால்வகை நிலைத்தாய், வருணந்தோறும் வேறுபாடு உடைமையின், சிறுபான்மை ஆகிய அச்சிறப்பியல்புகள் ஒழித்து, எல்லார்க்கும் ஒத்தலின் பெரும்பான்மை ஆகிய பொது இயல்பு பற்றி, 'இல்லறம்' 'துறவறம்' என இருவகைநிலையால் கூறப்பட்டது.

அவற்றுள், இல்லறமாவது, இல்வாழ்கை நிலைக்குச் சொல்லுகின்ற நெறிக்கண் நின்று, அதற்குத் துணையாகிய கற்புடை மனைவியோடும் செய்யப்படுவது ஆகலின், அதனை முதற்கண் கூறுவான் தொடங்கி, எடுத்துக்கொண்ட இலக்கியம் இனிது முடிதற்பொருட்டுக் கடவுள் வாழ்த்துக்கூறுகின்றார்.

அறத்துப்பால்

பாயிரவியல்

அதிகாரம் 1.கடவுள் வாழ்த்து

[அஃதாவது, கவி தான் வழிபடு கடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல். அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை? சத்துவம் முதலிய குணங்களான் மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற் கடவுளோடு இயைபு உண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும்