ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். (மெய்ப்பொருள் - மெய்ந்நூலில் சொல்லும் பொருள். நிலை பெற்ற ஞானம் இல்லாதவன் இடையே மெய்ப்பொருளை உணர்ந்தால் அதனைத் தன்ஞானம் இலாமையால் தானே அழித்துவிடும் : அது போல அருளாதான் இடையே அறஞ்செய்தால் அதனைத் தன் அருளாமையால் தானே அழித்து விடும் என்பது ஆயிற்று: ஆகவே, பிற அறங்கட்கெல்லாம் அருள் உடைமை மூலம் என்பது பெற்றாம். இவை நான்கு பாட்டானும் அத்துணை இல்லாதார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.) வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து. 250 வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.) அதிகாரம் 26. புலான் மறுத்தல்
(அஃதாவது, ஊன் உண்டலை ஒழிதல். கொலைப்பாவத்தைப் பின்னும் உளது ஆக்கலின் அதற்குக் காரணம் ஆதலையும் முன்னும் அதனான் வருதலின் அதன் காரியம் ஆதலையும் ஒருங்குடையதாய ஊன் உண்டல் அருளுடையார்க்கு இயைவதன்று. ஆகலின் அதனை விலக்குதற்கு இஃது அருள் உடைமையின் பின் வைக்கப்பட்டது.)தன்னூன் பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான் எங்ஙனம் ஆளும் அருள்.251
|