விடும். தவம் செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். ( 'சுடச்சுடரும் பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின். 'ஒளி' என்றார்.) தன்உயிர் தான்அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும். 268 தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான் தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம் தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும். (தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல். அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின், 'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட் பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.) கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. 269 கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு. ( சிறப்பு உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம் தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.) இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் நோலா தவர். 270 இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார் சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன, என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை,
|