பக்கம் எண் :

112

பாவமாயின் கொடியர் எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம். இதனால் அவரை அறியும் ஆறு கூறப்பட்டது.)

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்.

280
மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும் வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர் தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து விடின். (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால் கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என அவரது சிறப்புக் கூறப்பட்டது.)

அதிகாரம் 29. கள்ளாமை

(அஃதாவது, பிறர் உடைமையாயிருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமை. கருதலும் செய்தலோடு ஒத்தலின் , 'கள்ளாமை' என்றார். இல்வாழ்வார்க்கு ஆயின், தமரோடு விளையாட்டு வகையால் அவரை வஞ்சித்துக் கோடற்கு இயைந்த பொருள்களை அங்ஙனம் கொள்ளினும் அமையும். துறந்தார்க்கு ஆயின், அதனைக் கருதிய வழியும் பெரியதோர் இழுக்காம்ஆகலின், இது துறவறமாயிற்று. புறத்துப் போகாது மடங்கி ஒரு தலைப்பட்டு உயிரையே நோக்கற்பாலதாய அவர் மனம் , அஃது ஒழிந்து, புறத்தே போந்து பல தலைப்பட்டு உடம்பின் பொருட்டுப் பொருளை நோக்குதலேயன்றி , அது தன்னையும் வஞ்சித்துக்கொள்ளக் கருதுதல் அவர்க்குப் பெரியதோர் இழுக்காதல் அறிக. இவ்வாறு 'வாய்மை' முதல் 'கொல்லாமை' ஈறாய நான்கு அதிகாரத்திற்கும் ஒக்கும். பொருள் பற்றி நிகழும் குற்றத்தை விலக்குகின்ற தாகலின், இது காமம் பற்றி நிகழ்வதாய கூடா ஒழுக்கத்தின்பின் வைக்கப்பட்டது.)

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.

281