பக்கம் எண் :

113

எள்ளாமை வேண்டுவான் என்பான் - வீட்டினை இகழாது விரும்புவான் இவன் என்று தவத்தோரான் நன்கு மதிக்கப்படுவான், எனைத்து ஒன்று கள்ளாமை தன் நெஞ்சு காக்க - யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக்கொள்ளக் கருதாவகை தன் நெஞ்சினைக் காக்க. ('எள்ளாது' என்னும் எதிர்மறை வினையெச்சம் எள்ளாமை எனத் திரிந்து நின்றது. வீட்டினை இகழ்தலாவது காட்சியே அளவையாவது என்றும்,நிலம், நீர், தீ, வளி எனப் பூதம் நான்கே என்றும், அவற்றது புணர்ச்சி விசேடத்தால் தோன்றி, பிரிவால் மாய்வதாய உடம்பின்கண்ணே அறிவு மதுவின் கண் களிப்புப் போல வெளிப்பட்டு அழியும் என்றும், இறந்த உயிர் பின் பிறவாது என்றும், இன்பமும் பொருளும் ஒருவனால் செய்யப்படுவன என்றும் சொல்லும் உலோகாயதம் முதலிய மயக்க நூல்களைத் தெளிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுதல். ஞானத்திற்கு ஏதுவாய மெய்ந்நூற்பொருளையேனும், ஆசிரியனை வழிபட்டன்றி அவனை வஞ்சித்துக்கொள்ளின் அதுவும் களவாம் ஆகலின், 'எனைத்து ஒன்றும்' என்றார். 'நெஞ்சு கள்ளாமல் காக்க' எனவே, துறந்தார்க்கு விலக்கப்பட்ட கள்ளுதல் கள்ளக் கருதுதல் என்பது பெற்றாம்.) 

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்.

282
உள்ளத்தால் உள்ளலும் தீதே - குற்றங்களைத் தம் நெஞ்சால் கருதுதலும் துறந்தார்க்குப் பாவம், பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் - ஆதலால், பிறனொருவன் பொருளை அவன் அறியா வகையால் வஞ்சித்துக் கொள்வோம் என்று கருதற்க. ('உள்ளத்தால்' என வேண்டாது கூறினார், அவர் உள்ளம் ஏனையோர் உள்ளம் போலாது சிறப்புடைத்து என்பது முடித்தற்கு. உள்ளலும் என்பது இழிவு சிறப்பு உம்மை. 'அல்' விகுதி வியங்கோள் 'எதிர்மறைக்கண்' வந்தது. இவை இரண்டு பாட்டானும் இந்நடைக்குக் களவாவது இஃது என்பதூஉம் அது கடியப்படுவது என்பதூஉம் கூறப்பட்டன.)

கனவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக் கெடும்.
283