அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர்.289 அளவு அல்ல செய்தாங்கே வீவர் - அவ்வளவல்லாத தீய நினைவுகளை நினைத்த பொழுதே கெடுவர், அளவு அல்ல மற்றைய தேற்றாதவர் - களவு அல்லாத பிறவற்றை அறியாதவர். (தீய நினைவுகளாவன : பொருளுடையாரை வஞ்சிக்குமாறும், அவ்வஞ்சனையால் அது கொள்ளுமாறும், கொண்ட அதனால் தாம் புலன்களை நுகருமாறும் முதலாயின. நினைத்தலும் செய்தலாகலின், 'செய்து' என்றும், அஃது உள்ள அறங்களைப் போக்கி, கரந்த சொற் செயல்களைப் புகுவித்து அப்பொழுதே கெடுக்கும் ஆகலின் ஆங்கே வீவர்' என்றும் கூறினார். மற்றையாவன: துறந்தார்க்கு உணவாக ஓதப்பட்ட காய், கனி ,கிழங்கு சருகு முதலாயினவும், இல்வாழ்வார் செய்யும் தானங்களுமாம். தேற்றாமை: அவற்றையே நுகர்ந்து அவ்வளவால் நிறைந்திருத்தலை அறியாமை. இதனாற் கள்வார் கெடுமாறு கூறப்பட்டது.) கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு. 290 கள்வார்க்கு உயிர் நிலை தள்ளும் - களவினைப் பயில்வார்க்குத் தம்மின் வேறல்லாத உடம்பும் தவறும், கள்ளார்க்குப் புத்தேள் உலகு தள்ளாது - அது செய்யாதார்க்கு நெடுஞ்சேணது ஆகிய புத்தேள் உலகும் தவறாது. (உயிர் நிற்றற்கு இடனாகலின், உயிர்நிலை எனப்பட்டது. சிறப்பு உம்மைகள் இரண்டும் விகாரத்தால் தொக்கன. இம்மையினும் அரசனால் ஒறுக்கப்படுதலின், 'உயிர் நிலையும் தள்ளும்' என்றும், மறுமையினும் தேவராதல் கூடுதலின் 'புத்தேள் உலகும் தள்ளாது' என்றும் கூறினார். 'மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து' (குறள்.566) என்புழியும் 'தள்ளுதல்' இப்பொருட்டாதல் அறிக. இதற்குப் பிறவாறு உரைப்பாரும் உளர். இதனான் இருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.) அதிகாரம் 30. வாய்மை(அஃதாவது மெய்யினது தன்மை. பெரும்பான்மையும் காமமும் பொருளும் பற்றி நிகழ்வதாய பொய்ம்மையை விலக்கலின் , இது 'கூடா ஒழுக்கம்' , 'கள்ளாமை' களின் பின் வைக்கப்பட்டது.)
|