வாய்மை எனப்படுவ தியாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.291 வாய்மை எனப்படுவது யாது எனின் - மெய்ம்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது யாது என்று வினவின், தீமை யாதொன்றும் இலாத சொலல் - அது பிறிதோருயிர்க்குத் தீங்கு சிறிதும் பயவாத சொற்களைச் சொல்லுதல். ('தீமை யாதொன்றும் இலாத' என இயையும். 'எனப்படுவது' என்பது 'ஊர் எனப்படுவது உறையூர்' என்றாற் போல நின்றது. இதனான் நிகழ்ந்தது கூறல் என்பது நீக்கப்பட்டது. அது தானும், தீங்கு பயவாதாயின் மெய்ம்மையாம் : பயப்பின் பொய்ம்மையாம் என்பது கருத்து.) பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின் 292 புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் - பிறர்க்குக் குற்றம் தீர்ந்த நன்மையைப் பயக்குமாயின் , பொய்ம்மையும் வாய்மை இடத்த - பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் பால ஆம். (குற்றம் தீர்ந்த நன்மை : அறம். அதனைப் பயத்தலாவது, கேடாதல் சாக்காடாதல் எய்த நின்றதோர் உயிர், அச்சொற்களின் பொய்ம்மையானே அதனின் நீங்கி இன்புறுதல். நிகழாதது கூறலும், நன்மை பயவாதாயின், பொய்ம்மையாம், பயப்பின், மெய்ம்மையானே என்பது கருத்து. இவை இரண்டு பாட்டானும் 'தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் மெய்ம்மை எனவும், நன்மை பயவாத நிகழ்ந்தது கூறலும், தீங்கு பயக்கும் நிகழந்தது கூறலும் பொய்ம்மை' எனவும் அவற்றது இலக்கணம் கூறப்பட்டது.) தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293 தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் -
|