பக்கம் எண் :

118

பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
294
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் - ஒருவன் தன்னுள்ளத்திற்கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின், உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உளன் - அவன் உயர்ந்தோர் உள்ளத்தின்கண் எல்லாம் உளனாம். ('உள்ளத்தால்' என்பது வேற்றுமை மயக்கம். பொய் கூறாது ஒழுகுதலாவது மெய் கூறி ஒழுகுதல் அவனது அறத்தினது அருமை நோக்கி உயர்ந்தோர் எப்பொழுதும் அவனையே நினைப்பர் என்பதாம். இதனான் இம்மைப்பயன் கூறப்பட்டது.)

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

295
மனத்தொடு வாய்மை மொழியின் - ஒருவன் தன்மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின், தவத்தொடு தானம் செய்வாரின் தலை - அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். (மனத்தொடு பொருந்துதல் - மனத்திற்கு ஏறுதல். புறமாகிய மெய்யால் செய்யும் அவற்றினும் அகமாகிய மனம் மொழிகளால் செய்யும் அது பயனுடைத்து என்பதாம்.)

பொய்யாமை அன்ன புகழ்இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்.

296
பொய்யாமை அன்ன புகழ் இல்லை - ஒருவனுக்கு இம்மைக்குப் பொய்யாமையை ஒத்த புகழ்க் காரணம் இல்லை. எய்யாமை எல்லா அறமும் தரும் - மறுமைக்கு மெய் வருந்தாமல்