பக்கம் எண் :

121

அதிகாரம் 31. வெகுளாமை

(அஃதாவது, சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன் மாட்டு உளதாய இடத்தும் அதனைச் செய்யாமை. இது பொய்ம்மைபற்றி நிகழ்வதாய வெகுளியை விலக்கலின், வாய்மையின் பின் வைக்கப்பட்டது.)

செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.
301
சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது ஒழிந்தால் என்? ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.)

செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

302
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.)

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.

303
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான்.