(வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.) நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற. 304 நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.) தன்னைத்தான் காக்கின் சினம்காக்க காவாக்கால் தன்னையே கொல்லும் சினம். 305 தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும். ('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.) சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும் ஏமப் புணையைச் சுடும். 306 சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் - தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும். ('சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்: 'தான்சேர்ந்த இடத்தைக்
|