பக்கம் எண் :

125

அதிகாரம் 32. இன்னா செய்யாமை


(அஃதாவது, தனக்கு ஒரு பயன் நோக்கியாதல் ,செற்றம் பற்றியாதல். சோர்வானாதல் ஓர் உயிர்க்கு இன்னாதவற்றைச் செய்யாமை. இன்னா செய்தல் வெகுளி ஒழியவும் நிகழும் என்பது அறிவித்தற்கு , இது வெகுளாமையின்பின் வைக்கப்பட்டது.)

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
311
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் - யோகமாகிய சிறப்புத்தரும் அணிமா முதலிய செல்வங்களைப் பிறர்க்கு இன்னா செய்து பெறலாமாயினும்; பிறர்க்கு இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - அதனைச் செய்யாமை ஆகமங்கள் கூறிய ஆற்றான் மனந்தூயாராது துணிவு. (உம்மை பெறாமைமேற்று. சிறப்பு உடையதனைச் சிறப்பு என்றும், அதன் பயிற்சியான் வாயுவை வென்று எய்தப்படுதலின் எட்டுச் சித்திகளையும் சிறப்பு ஈனும் செல்வம் என்றும், காமம் வெகுளி மயக்கம் என்னும் குற்றங்கள் அற்றமையான் 'மாசு அற்றார்' என்றும் கூறினார். இதனான் தமக்கொரு பயன் நோக்கிச் செய்தல் விலக்கப்பட்டது.)

கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.

312

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் - தம்மேல் செற்றம் கொண்டு ஒருவன் இன்னாதவற்றைச் செய்த இடத்தும். மறுத்து இன்னா செய்யாமை மாசு அற்றார் கோள் - மீண்டுதாம் அவனுக்கு இன்னாதவற்றைச் செய்யாமையும் அவரது துணிவு. (இறந்தது தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. அவ் இன்னாதவற்றை உட்கொள்ளாது விடுதல் செயற்பாலது என்பதாம்.)