அறவினை யாதெனில் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாம் தரும். 321 (அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம் ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும் கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் - அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும் தானே தரும் ஆதலான். (அறம் - சாதியொருமை. விலக்கியது ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின் விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப் பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம். கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும் தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை முகத்தால் கூறியவாறாயிற்று.) பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322 பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள் எல்லாவற்றினும் தலையாய அறம். ('பல்லுயிரும்' என்னும் முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும் கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல் இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்' என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான் 'இது தலையாய அறம்' என்றும் கூறினார்.) ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று. 323
|