கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லா துயிருண்ணும் கூற்று. 326 கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் - கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது. (மிகப்பெரிய அறம் செய்தாரும் மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும் அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும் கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள் இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச் செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்; நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து. இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.) தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது இன்னுயிர் நீக்கும் வினை. 327 தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின் நீங்கிப் போமாயினும்: தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின் நீக்கும் தொழிலைச் செய்யற்க. ('தன்னை அது கொல்லினும் தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம் கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும் நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச் செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும் உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை அறிக.) நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கம் கடை. 328
|