நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம் என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர் உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும் செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும் செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக் 'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும், வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள் தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம் அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும் கொலையது குற்றம் கூறப்பட்டது.) கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர் புன்மை தெரிவா ரகத்து. 329 கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத் தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப் புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர். (கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண் கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை எய்துவர் என்பதாம்.) உயிருடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின் செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330 செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில் வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப - இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே (நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும்
|