பக்கம் எண் :

134

இழுக்கு என்பது இதனால் கூறப்பட்டது. இனி புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றிச் செய்து சிற்றின்பத்துக்கு ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும், அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின், வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.)

கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
332
பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன் மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும் அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். (பெருஞ்செல்வம் எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற, எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக் காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து, அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும் ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால் தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம் என்றதாயிற்று.)

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

333
அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத இயல்பினையுடைத்துச் செல்வம், அது பெற்றால் அற்குப ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும் அறங்களை அப்பெற்ற பொழுதே செய்க. ('அல்கா' என்பது திரிந்து நின்றது. ஊழுள்ளவழியல்லது துறந்தாரால் பெறப்படாமையின், அது பெற்றால் என்றும் அஃது இல்வழி நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால் செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும் கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான ஏதுவாய் வீடு பயத்தலின் அவற்றை 'அல்குப' என்றும் 'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும் செல்வம் நிலையாமை கூறப்பட்டது.)