பக்கம் எண் :

136
நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.
336
ஒருவன் நெருநல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன. அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.)

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

337
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதளவும் தம் உடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார், கோடியும் அல்ல பல கருதுப - மாட்டாது வைத்தும், கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை நினையா நிற்பர் அறிவிலாதார். (இழிவு சிறப்பு உம்மையால் பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது. காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின், அஃது அறியப்படாதாயிற்று.பலவாய நினைவுகளாவன: பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும் அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம் முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும், அவற்றிற்கு வரும் இடையூறுகளும் அவற்றை நீக்குமாறும் நீக்கி அப்பொருள் கடைக் கூட்டுமாறும், அதனைப் பிறர் கொள்ளாமல் காக்குமாறும், அதனால் நட்டாரை ஆக்குமாறும், நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும் முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து நிலையாமை கூறியவாறு. இனிக் 'கருதுப' என்பதனை அஃறிணைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.)

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை நட்பு.

338
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்று - முன் தனியாத முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம் வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பொடு உயிரிடை நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு. ('தனித்துஒழிய' என்றதனான்