பக்கம் எண் :

138

'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல் அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம், ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும் அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று,இவ்வாற்றால் யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.)

அதிகாரம் 35. துறவு


[அஃதாவது, புறமாகிய செல்வத்தின்கண்ணும் அகமாகிய யாக்கையின்கண்ணும் உளதாம் பற்றினை, அவற்றது நிலையாமை நோக்கி, விடுதல், அதிகார முறைமையும் இதனானே விளங்கும்.]

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
341
யாதனின் யாதனின் நீங்கியான் - ஒருவன் யாதொரு பொருளின் யாதொரு பொருளின் நீங்கினான், அதனின் அதனின் நோதல் இலன் - அவன் அப்பொருளால் துன்பம் எய்துதல் இலன். (அடுக்குகள் பன்மை குறித்து நின்றன. நீங்குதல் - துறத்தல். ஈண்டுத்துன்பம் என்றது இம்மைக்கண் அவற்றைத் தேடுதலானும், காத்தலானும், இழத்தலானும் வருவனவும், மறுமைக்கண் பாவத்தான் வருவனவும் ஆய இருவகைத் துன்பங்களையும் ஆம். எல்லாப் பொருளையும் ஒருங்கே விடுதல் தலை, அஃதன்றி ஒரொ ஒன்றாக விடினும் அவற்றான் வரும் துன்பம் இலனாம் என்பது கருத்து.)

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற் பால பல.

342