அஃது இயமம், நியமம், இருப்பு, உயிர் நிலை, மன ஒடுக்கம், தாரணை, தியானம், சமாதி என எண்வகைப்படும். அவற்றின் பரப்பெல்லாம் ஈண்டுஉரைப்பின் பெருகும். யோக நூல்களுள் காண்க. 'மற்றுச் சார்தரா' என இயையும். சாரக்கடவனவாய் நின்ற துன்பங்களாவன: பிறப்பு அநாதியாய் வருதலின் உயிரான் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளின் பயன்களுள்இறந்த உடம்புகளான் அனுபவித்தனவும் 'பிறந்த உடம்பான்முகந்து நின்றனவும் ஒழியப் பின்னும் அனுபவிக்கக்கடவனவாய்க் கிடந்தன. அவை விளக்கின் முன் இருள்போல ஞானயோகங்களின் முன்னர்க் கெடுதலான், 'அழித்துச்சார்தரா' என்றார். இதனை ஆருகதர் 'உவர்ப்பு' என்ப. பிறப்பிற்குக் காரணம் ஆகலான்' நல்வினைப் பயனும் 'நோய்'எனப்பட்டது. மேல் மூன்று உபாயத்தானும் பரம்பொருளைஉணரப் பிறப்பு அறும் என்றார். அஃது அறும்வழிக் கிடந்ததுன்பங்கள் எல்லாம் என் செய்யும் என்னும் கடாவைஆசங்கித்து. அவை ஞான யோகங்களின் முதிர்ச்சி உடையஉயிரைச் சாரமாட்டாமையானும், வேறு சார்பு இன்மையானும் 'கெட்டு விடும்'என்பது இதனால் கூறப்பட்டது.) காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.360 காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெட - ஞான யோகங்களின் முதிர்ச்சியுடையார்க்கு விழைவு, வெறுப்பு, அவிச்சை என்னும் இக்குற்றங்கள் மூன்றனுடைய பெயருங்கூடக் கெடுதலான், நோய் கெடும் - அவற்றின் காரியமாய வினைப்பயன்கள் உளவாகா. (அநாதியாய அவிச்சையும் 'அதுபற்றி யான்' என மதிக்கும் அகங்காரமும், அதுபற்றி எனக்கு இது வேண்டும் என்னும் அவாவும், அதுபற்றி அப்பொருட்கண் செல்லும் ஆசையும், அதுபற்றி அதன் மறுதலைக்கண் செல்லும் கோபமும், என வடநூலார் குற்றம் ஐந்து என்றார். இவர் அவற்றுள் அகங்காரம் அவிச்சைக்கண்ணும் அவாவுதல் என்பது ஆசைக்கண்ணும் அடங்குதலான், 'மூன்று' என்றார். இடையறாத ஞானயோகங்களின் முன்னர் இக்குற்றங்கள் மூன்றும் காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத் துய்போலும் ஆகலின், அம் மிகுதிதோன்ற 'இவை மூன்றன் நாமங்கெட' என்றார். இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. 'கெட' என்பது எச்சத் திரிவு. 'நோய்' சாதியொருமை. காரணமாய அக்குற்றங்களைக்
|