கொடுத்தார் காரியமாகிய வினைகளைச்செய்யாமையின், அவர்க்கு வரக்கடவ துன்பங்களும் இலவாதல் மெய்உணர்வின்பயன் ஆகலின், இவை இரண்டுபாட்டும்இவ்வதிகாரத்த வாயின. இவ்வாற்றானே மெய்யுணர்ந்தார்க்கு நிற்பன எடுத்த உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களுமே என்பது பெற்றாம்.) அதிகாரம் 37. அவா அறுத்தல் [அஃதாவது, முன்னும் பின்னும் வினைத்தொடர்பு அறுத்தார்க்கு நடுவுநின்ற உடம்பும் அதுகொண்ட வினைப்பயன்களும் நின்றமையின் , வேதனை பற்றி ஒரோவழித் துறக்கப்பட்ட புலன்கள்மேல் பழைய பயிற்சி வயத்தான் நினைவு செல்லுமன்றே? அந்நினைவும் அவிச்சை எனப் பிறவிக்கு வித்து ஆம் ஆகலின், அதனை இடைவிடாது மெய்ப்பொருள் உணர்வான் அறுத்தல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும்] அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து.361 எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பு ஈனும் வித்து - எல்லா உயிர்கட்கும் எக்காலத்தும் கெடாது வருகின்ற பிறப்பினை விளைவிக்கும் வித்து: அவாஅ என்ப - அவா என்று சொல்லுவர் நூலோர். (உடம்பு நீங்கிப்போம் காலத்து அடுத்த வினையும், அது காட்டும் கதி நிமித்தங்களும் அக்கதிக்கண் அவாவும் உயிரின்கண் முறையே வந்துதிப்ப, அறிவை மோகம் மறைப்ப, அவ்வுயிரை அவ்வவா அக்கதிக்கண் கொண்டுசெல்லும் ஆகலான், அதனைப் பிறப்பீனும் வித்து என்றும் கதிவயத்தான் உளதாய அவ்வுயிர் வேறுபாட்டினும் அவை தன்மை திரியும் உற்சர்ப்பிணி, அவசர்ப்பிணி என்னும் கால வேறுபாட்டினும் அது வித்தாதல் வேறு படாமையின், 'எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்'என்றும் இஃது எல்லாச் சமயங்கடகும் ஒத்தலான் 'என்ப' என்றும்கூறினார். இதனான்,
|