பக்கம் எண் :

157

பொருட்பால்

அரசியல்

இனி , இல்லறத்தின் வழிப்படுவனவாய பொருள் இன்பங்களுள் இருமையும் பயப்பதாயபொருள் கூறுவான் எடுத்துக் கொண்டார் . அது தன் துணைக்காரணமாய அரச நீதி கூறவே அடங்கும் . அரச நீதியாவது , காவலை நடாத்தும் முறைமை , அதனை அரசியல் , அங்கவியல் ,ஒழிபியல் என மூவகைப்படுத்து , மலர்தலை உலகிற்கு உயிரெனச் சிறந்த அரசனது இயல்பு , இருபத்தைந்து அதிகாரத்தால் கூறுவான் தொடங்கி , முதற்கண் இறை மாட்சி கூறுகின்றார் .

அதிகாரம் 39 . இறை மாட்சி


[ அஃதாவது அவன்றன் நற்குண நற்செய்கைகள் , உலக பாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் , ' இறை ' என்றார் : 'திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும் , '(திருவாய் 4,4,8) - (திருவாய் 34,8) என்று பெரியாரும் பணித்தார்.]

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.
381
படைகுடி கூழ் அமைச்சு நட்பு அரண் உடையான் - படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்று சொல்லப்பட்ட ஆறு அங்கங்களையும் உடையவன், அரசருள் ஏறு = அரசருள் ஏறு போல்வான். (ஈண்டுக் 'குடி' என்றது, அதனை உடைய நாட்டினை. கூழ் என்றது, அதற்கு ஏதுவாகிய பொருளை. அமைச்சு , நாடு, அரண், பொருள், படை , நட்பு என்பதே முறையாயினும் ஈண்டுச் செய்யுள் நோக்கிப் பிறழ வைத்தார். 'ஆறும்' உடையான் என்றதனால், அவற்றுள் ஒன்று இல்வழியும் அரசநீதி செல்லாது என்பது பெற்றாம்.