அறன் இழுக்காது - தனக்கு ஒதிய அறத்தின் வழுவாது ஒழுகி, அல்லவை நீக்கி - அறனவல்லவை தன் நாட்டின் கண்ணும் நிகழாமல் கடிந்து, மறன் இழுக்கா மானம் உடையது அரசு - வீரத்தின் வழுவாத தாழ்வு இன்மையினை உடையான் அரசன். (அவ்வறமாவது , ஓதல், வேட்டல், ஈதல் என்னும் பொதுத்தொழிலினும், படைக்கலம் பயிறல், பல் உயிரோம்பல், பகைத்திறம் தெறுதல் என்னும் சிறப்புத்தொழிலினும் வழுவாது நிற்றல். மாண்ட, 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா. 55) - என்பதனால், இவ்வறம் பொருட்குக் காரணமாதல் அறிக. அல்லவை, கொலை , களவு முதலாயின. குற்றமாய மானத்தின் நீக்குதற்கு, 'மறன் இழுக்கா மானம்' என்றார். அஃதாவது, 'வீறின்மையின் விலங்காம் என மதவேழமும் எறியான் - ஏறுண்டவர் நிகராயினும் பிறர் மிச்சில் என்று எறியான் - மாறன்மையின் மறம்வாடும் என்று இளையாரையும் எறியான் - ஆறன்மையின் முதியாரையும் எறியான் அயில் உழவன் (சீவக. மண்மக.159) எனவும் , அழியுநர் புறக்கொடை அயில்வேல் ஓச்சான்'.(பு.வெ. வஞ்சி. 20) எனவும் சொல்லப்படுவது. அரசு: அரசனது தன்மை : அஃது உபசார வழக்கால் அவன்றன்மேல் நின்றது.) இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. 385 இயற்றலும் - தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேல் உளவாக்கலும், ஈட்டலும் - அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், காத்தலும் - தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமல் காத்தலும், காத்த வகுத்தலும் - காத்தவற்றை அறம், பொருள், இன்பங்களின் பொருட்டு விடுத்தலும், வல்லது அரசு - வல்லவனே அரசன் . (ஈட்டல், காத்தல் என்றவற்றிற்கு ஏற்ப, இயற்றல்என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. பொருள்களாவன:மணி, பொன், நெல் முதலாயின. அவை வரும் வழிகளாவன : பகைவரை அழித்தலும் , திறை கோடலும் , தன் நாடு தலையளித்தலும் முதலாயின. பிறர் என்றது பகைவர், கள்வர், சுற்றத்தார். வினைசெய்வார் முதலாயினர். கடவுளர், அந்தணர், வறியோர் என்று இவர்க்கும் புகழிற்கும் கொடுத்தலை அறப்பொருட்டாகவும், யானை, குதிரை, நாடு, அரண் என்று இவற்றிற்கும், பகையொடு கூடலின் பிரிக்கப்படுவார்க்கும், தன்னில்பிரிதலின் கூட்டப்படுவார்க்கும் கொடுத்தலைப் பொருட் பொருட்டாகவும், மண்டபம், வாவி, செய்குன்று, |