பக்கம் எண் :

164

இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண்உடைமையின் கற்றாரைக் கண்ணுடையர் என்றும் அஃதின்றி நோய்முதலியவற்றால் துன்பம் செய்யும் ஊனக்கண்ணேஉடைமையின், கல்லாதவரைப் புண்ணுடையர் என்றும் கூறினார்.மேல் கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மைகூறியவாற்றான் , பொருள் நூல்களையும் கருவிநூல்களையும்கற்றாரது உயர்வும், கல்லாதாரது இழிவும் இதனான் தொகுத்துக்கூறப்பட்டன.)

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
394
உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல் அனைத்தே - யாவரையும். அவர் உவக்குமாறு தலைப்பெய்து, இனி இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு நீங்குதலாகிய அத்தன்மைத்து, புலவர் தொழில் - கற்றறிந்தாரது தொழில். (தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின், 'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத் தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால் கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது.)

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

395
உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் - 'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா.183) ஆதலான் , செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும் கற்றார் தலையாயினார். கல்லாதவர் கடையரே - அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும் இழிந்தாரேயாவர். (உடையார், இல்லார் என்பன உலகவழக்கு. ஏக்கறுதல் ஆசையால் தாழ்தல். கடையர் என்றதனான், அதன் மறுதலைப் பெயர் வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும் அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார். இதனால் கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும் கூறப்பட்டன.)