தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு.396 மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண் கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும், மாந்தற்கு அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு அறிவு கற்ற அளவிற்றாக ஊறும். (ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை. 'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது, மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ் மாறு கொள்ளாவழியாகலின், மேல் 'உண்மை அறிவே மிகும்' (குறள் .373) என்றதனோடு மலையாமை அறிக.)யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. 397 யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத் தன்னாடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும் நாடாம், யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன் சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின், ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது என் கருதி? (உயிரோடு சேறலின், 'சாம்துணையும்' என்றார். பிறர் நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப் பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை, அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.)ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப்பு உடைத்து. 398 ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி, எழுமையும் ஏமாப்பு உடைத்து - எழுபிறப்பினும் சென்று உதவுதலை உடைத்து. (வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப் புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து' என்றார். எழுமை - மேலே கூறப்பட்டது(குறள் 62). உதவுதல் - நன்னெறிக்கண் உய்த்தல்.)தாம்இன் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந் தார். 399
|