பக்கம் எண் :

169

போலும். (அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக் கடிதிற்காண்டலும்மறவாமையும் முதலாயின. 'பாவை' ஆகுபெயர். 'உருவின்மிக்கதோர் உடம்பது பெறுதலும் அரிது' (சீவக. முத்தி. 154)ஆகலான், எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவுஇல்வழிச் சிறப்பில என்பதாம். இதனால் அவர்வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.)

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
408
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது - கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது, கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற செல்வம். (இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம் நிலையின் அன்றிமாறி நிற்றலால் தாம் இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும் இரண்டற்கும் ஒக்குமாயினும், திரு கல்லாரைக் கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான், 'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால் அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.)

மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.

409
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார் உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும், கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண் பிறந்து வைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய பெருமையிலர். (உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும் , உயிரோடு செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம். இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை கூறப்பட்டது.)

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோ டேனை யவர்.

410
விலங்கொடு மக்கள் அனையர் - விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத் தீமையுடையர்; இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் - விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர். (இலங்குநூல்: சாதிப் பெயர். விளங்குதல்: மேம்படுதல் . விலங்கின்மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார்கண்ணேயாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர்அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால்அவர் மக்கட்பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது.)