அதிகாரம் 42. கேள்வி [ அஃதாவது , கேட்கப்படும் நூற்பொருள்களைக் கற்றறிந்தார் கூறக் கேட்டல் , கற்றவழி அதனின் ஆய அறிவை வலியுறுத்தலானும் , கல்லாத வழியும் அதனை உண்டாக்குதலானும் இது கல்வி , கல்லாமைகளின் பின் வைக்கப்பட்டது.] செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை. 411 செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் - ஒருவருக்குச் சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம், அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும் தலையாகலான். ( செவியான் வரும் செல்வம் - கேள்வியால் எல்லாப் பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால் வருவன. அவை நிலையா ஆகலானும், துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று. அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது குறிப்பெச்சம்.)செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும். 412 செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு உணவாகிய கேள்வி இல்லாத பொழுது, வயிற்றுக்கும் சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு இடப்படும். (சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து' என்றும், பெரிதாயவழித்தேடல் துன்பமேயன்றி நோயும் காமமும் பெருகுதலான் சிறிது என்றும் அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான் 'ஈயப்படும்' என்றும் கூறினார்.
|