எவ்வ துறைவ துலகம் உலகத்தோ டவ்வ துறைவ தறிவு.426 உலகம் எவ்வது உறைவது - உலகம் யாதொருவாற்றான் ஒழுகுவதாயிற்று, உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு - அவ்வுலகத்தோடு மேவித் தானும் அவ்வாற்றான் ஒழுகுவது அரசனுக்கு அறிவு. ('உலகத்தையெல்லாம் யான் நியமித்தலான் என்னை நியமிப்பாரில்லை,' எனக் கருதித் தான் நினைத்தவாறே ஒழுகின், பாவமும் பழியும் ஆம் ஆகலான். அவ்வாறு ஒழுகுதல் அறிவு அன்று என விலக்கியவாறு ஆயிற்று. இவை ஐந்து பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.)அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார் அஃதறி கல்லா தவர். 427 அறிவுடையார் ஆவது அறிவார் - அறிவுடையராவர் வரக் கடவதனை முன் அறிய வல்லார் , அறிவிலார் அஃது அறிகல்லாதவர் - அறிவிலராவார் அதனைமுன் அறியமாட்டாதார். (முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது: வந்தால் அறிதல். இனி, 'ஆவது அறிவார் என்பதற்குத் தமக்கு நன்மையறிவார்' என்று உரைப்பாரும் உளர்.)அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ தஞ்சல் அறிவார் தொழில். 428 அஞ்சுவது அஞ்சாமை பேதைமை - அஞ்சப்படுவதனை அஞ்சாமை பேதைமையாம், அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் - அவ்வஞ்சப்படுவதனை அஞ்சுதல் அறிவார் தொழிலாம். (பாவமும் பழியும் கேடும் முதலாக அஞ்சப்படுவன பலவாயினும், சாதி பற்றி, 'அஞ்சுவது' என்றார். அஞ்சாமை எண்ணாது செய்து நிற்றல். அஞ்சுதல்: எண்ணித் தவிர்தல். அது காரியமன்று என்று இகழப்படாது என்பார் 'அறிவார் தொழில்' என்றார். அஞ்சாமை இறை மாட்சியாகச் சொல்லப்பட்டமையின் ,ஈண்டு அஞ்ச வேண்டும் இடம் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் அதனைஉடையாரது இலக்கணம் கூறப்பட்டது.)
|