வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை. 439 எஞ்ஞான்றும் தன்னை வியவற்க - தான் இறப்ப உயர்ந்த ஞான்றும் மதத்தால் தன்னை நன்கு மதியாது ஒழிக, நன்றி பயவா வினை நயவற்க - தனக்கு நன்மை பயவா வினைகளை மனத்தால் விரும்பாது ஒழிக. (தன்னை வியந்துழி இடமும் காலமும் வலியும் அறியப்படாமை யானும் , அறனும் பொருளும் இகழப்படுதலானும், எஞ்ஞான்றும் வியவற்க என்றும் கருதியது முடித்தே விடுவல் என்று அறம் பொருள் இன்பங்கள் பயவா வினைகளை நயப்பின் , அவற்றால் பாவமும் பழியும் கேடும் வருமாகலின், அவற்றை 'நயவற்க' என்றும் கூறினார். இதனான், மத மானங்களின் தீமை கூறப்பட்டது.) காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் ஏதில ஏதிலார் நூல். 440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின் - தான் காதலித்த பொருள்களை அவர் அக்காதல் அறியாமல் அனுபவிக்க வல்லனாயின், ஏதிலார் நூல் ஏதில் - பகைவர் தன்னை வஞ்சித்தற்கு எண்ணும் எண்ணம் பழுதாம். (அறிந்தவழி அவை வாயிலாகப் புகுந்து வஞ்சிப்பர் ஆகலின், அறியாமல் உய்த்தால் வாயில் இன்மையின் வஞ்சிக்கப்படான் என்பதாம். காமம், வெகுளி, உவகை என்பன முற்றக்கடியும் குற்றம் அன்மையின், இதனான் பெரும்பான்மைத்தாகிய காமம் நுகருமாறு கூறி, ஏனைச் சிறுபான்மையவற்றிற்குப் பொதுவகை விலக்கினையே கொண்டொழிந்தார்.) அதிகாரம் 45. பெரியாரைத் துணைக்கோடல்[ அஃதாவது , மூவிருகுற்றமும் முறைமையின் கடிதலின் ,காவற் சாக்காடு உகைத்தற்கு உரியனாய அரசன் , தீநெறி விலக்கி நன்னெறிச் செலுத்தும் பேரறிவுடையாரைத் தனக்குத் துணையாக் கோடல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். பேரறிவுடையராவார்: அரசர்க்கும் அங்கங்கட்கும் மானுடத் தெய்வக் குற்றங்கள் வாராமல் காத்தற்கு உரிய அமைச்சர் ,புரோகிதர்.]
|