அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல்.443 பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - அப்பெரியவர்களை அவர் உவப்பன அறிந்து செய்து தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல், அரியவற்றுள் எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள் எல்லாவற்றுள்ளும் பெரிது. (உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது. இதனான் அவையெல்லாம் உளவாதல் நோக்கி.)தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை. 444 தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச் சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல், வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு . எல்லா வலி உடைமையினும் தலை. (பொருள், படை, அரண்களான் ஆய வலியினும் இத்துணைவலி சிறந்தது என்றது. இவர் அவற்றான் நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு உரியர் ஆகலின்.)சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல். 445 சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம் அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான், மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன் அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத் துணையாகக் கொள்க. (இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே சூழவல்லனாயினும் அளவிறந்த தொழில்களான் ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி , அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர் என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும் பெரியாரைத் துணைகோடலின்சிறப்புக் கூறப்பட்டது.)
|