மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து.459 மனநலத்தின் மறுமை ஆகும்-ஒருவற்கு மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்று அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து-அதற்கு அச்சிறப்புத்தானும் இனநன்மையான் வலி பெறுதலை உடைத்து,(மனநலத்தின் ஆகும் மறுமை என்றது, பயப்பது மனநன்மைதானே, பிறிதொன்று அன்று, என்னும் மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று-வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. ஒரோவழித் தாமத குணத்தான் மனநலம் திரியினும் நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம் சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.)நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். 460 நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை. (ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.)
|