பக்கம் எண் :

190
அதிகாரம் 47. தெரிந்து செயல்வகை

[ அஃதாவது ,அரசன் தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யும் திறம் ; அச்செயல் பெரியாரைத் துணைக்கோடல் பயனுடைத்தாயவழி அவரோடும் செய்யப்படுவது ஆகலின் , இதுசிற்றினம் சேராமையின் பின் வைக்கப்பட்டது. ]

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

461
அழிவதூஉம் - வினைசெய்யுங்கால் அப்பொழுது அதனால் அழிவதையும், ஆவதூஉம் - அழிந்தால் பின் ஆவதனையும், ஆகி வழி பயக்கும் ஊதியமும் - ஆய் நின்று பிற்பொழுது தரும் ஊதியத்தையும், சூழ்ந்து செயல் - சீர் தூக்கி உறுவதாயின் செய்க. (உறுவதாவது - நிகழ்வின்கண் அழிவதனில் ஆவது மிக்கு, எதிர்வினும் அது வளர்ந்து வருதல் . அழிவது இன்மையின், எதிர்வின்கண் வரும் ஆக்கத்தை 'ஊதியம்' என்றார். எனவே, அவ்வூதியம் பெறின் நிகழ்வின்கண் அழிவதும் ஆவதும் தம்முள் ஒத்தாலும், ஒழிதற்பாற்று அன்று என்பது பெற்றாம். இரண்டு காலத்தும் பயன் உடைமை தெரிந்து செய்க என்பதாம்.)

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்
கரும்பொருள் யாதொன்றும் இல்.

462
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்க வல்ல அரசர்க்கு, அரும் பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை. (ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்து போந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.)