பக்கம் எண் :

191
ஆக்கங் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்,
463
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை - மேல் எய்தக்கடவ ஊதியத்தினை நோக்கி முன் எய்தி நின்ற முதல் தன்னையும் இழத்தற்கு ஏதுவாய செய்வினையை, அறிவுடையார் ஊக்கார் - அறிவு உடையார் மேற்கொள்ளார். ('கருதி' என்னும் வினையெச்சம் 'இழக்கும்' என்னும் பெயர்எச்ச வினை கொண்டது. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. ஆக்கமே அன்றி முதலையும் இழக்கும் வினைகளாவன: வலியும் காலமும் இடனும் அறியாது பிறர் மண் கொள்வான் சென்று, தம் மண்ணும் இழத்தல் போல்வன. முன் செய்து போந்த வினையாயினும் என்பார்,'செய்வினை' என்றார்.)

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பா டஞ்சு பவர்.

464
தெளிவு இலதனைத் தொடங்கார் - இனத்தோடும் தனித்தும் ஆராய்ந்து துணிதல் இல்லாத வினையைத் தொடங்கார், இளிவு என்னும் ஏதப்பாடு அஞ்சுபவர் - தமக்கு இளிவரவு என்னும் குற்றம் உண்டாதலை அஞ்சுவார். (தொடங்கின் இடையின் மடங்கலாகாமையின், 'தொடங்கார்' என்றார். இளிவரவு - அவ்வினையால் பின் அழிவு எய்தியவழி, அதன் மேலும் அறிவும் மானமும் இலர் என்று உலகத்தார் இகழும் இகழ்ச்சி. அஃது உண்டாதல் ஒருதலையாகலின், தெளிவுள் வழித் தொடங்குக என்பதாம்.)

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோர் ஆறு.

465
வகை அறச் குழாது எழுதல் - சென்றால் நிகழும் திறங்களை எல்லாம் முற்ற எண்ணாது, சிலவெண்ணிய துணையானே அரசன் பகைவர்மேல் செல்லுதல், பகைவரைப் பாத்திப்படுப்பது ஓர் ஆறு - அவரை வளரும் நிலத்திலே நிலைபெறச் செய்வது ஒரு நெறி ஆம். (அத்திறங்களாவன : வலி, காலம், இடன் என்ற இவற்றால் தனக்கும் பகைவர்க்கும் உளவாம் நிலைமைகளும், வினை தொடங்குமாறும், அதற்கு வரும் இடையூறுகளும், அவற்றை நீக்குமாறும், வெல்லுமாறும், அதனால் பெறும் பயனும் முதலாயின. அவற்றுள் சில எஞ்சினும் பகைவர்க்கு இடனாம் ஆகலான்,முற்றுப்பெற எண்ண வேண்டும் என்பதாம். இவை மூன்று பாட்டானும்ஒழியத்தகும் வினையும், ஒழியா வழிப்படும் இழுக்கும்கூறப்பட்டன.)