பக்கம் எண் :

194
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு.
470
தம்மொடு கொள்ளாத உலகு கொள்ளாது - அரசர் வினைமுடித்தற் பொருட்டுத் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வாராயின் உலகம் தம்மை இகழாநிற்கும், எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் - ஆகலான் அஃது இகழா உபாயங்களை நாடிச் செய்க. ('தம்' என்பது ஆகுபெயர், தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்தலாவது, தாம் வலியராய் வைத்து மெலியார்க்கு உரிய கொடுத்தல் முதலிய மூன்றனைச் செய்தலும், மெலியராய் வைத்து வலியார்க்கு உரிய ஒறுத்தலைச் செய்தலுமாம். இவை இரண்டும் அறிவிலார் செய்வன ஆகலின், 'உலகம் கொள்ளாது' என்றார். அஃது எள்ளாதன செய்தலாவது: அவற்றைத் தத்தம் வன்மை மென்மைகட்கு ஏற்பச் செய்தல். மேல் இடவகையான் உரிமை கூறிய உபாயங்கட்கு வினைமுதல் வகையான் உரிமை கூறியவாறு. இவை நான்கு பாட்டானும் செய்வனவற்றிற்கு உபாயமும் அதனது உரிமையும் கூறப்பட்டன.)

அதிகாரம் 48. வலி அறிதல்

[ அஃதாவது ,அவ்வுபாயங்களுள் ஒறுத்தல் குறித்த அரசன் நால்வகை வலியையும் அளந்தறிதல் , அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும். ]

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

471
வினை வலியும் - தான் செய்யக்கருதிய வினைவலியையும், தன் வலியும் - அதனைச் செய்து முடிக்கும் தன் வலியையும், மாற்றான் வலியும் - அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும், துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார் வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன் வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க. (இந் நால்வகை வலியுள் வினைவலி அரண் முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும். 'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால்,தோற்றல் ஒருதலையாய குறைவின் கண்ணும், வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது பெற்றாம்.)