பக்கம் எண் :

198
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
480
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால், வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும். ('ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.)

அதிகாரம் 49. காலம் அறிதல்

[ அஃதாவது ,வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேல் சேறலுற்ற அரசன் , அச்செலவிற்கு ஏற்ற காலத்தினை அறிதல் , அதிகாரமுறைமையும் இதனானே விளங்கும் . ]

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

481
கூகையைக் காக்கை பகல் வெல்லும் - தன்னின் வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின்கண் வெல்லாநிற்கும், இகல் வெல்லும் வேந்தர்க்குப் பொழுது வேண்டும் - அது போலப் பகைவரது இகலை வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம் இன்றி அமையாதது. (எடுத்துக்காட்டு உவமை, காலம் அல்லாவழி வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது. இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும் தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும் முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும் இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக் கூறப்பட்டது.)