காலம் கருதி இருப்பர் கலங்காது ஞாலம் கருது பவர்.485 கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம் எல்லாம் கொள்ளக் கருதும் அரசர், காலம் கருதி இருப்பர் - தம் வலிமிகுமாயினும், அது கருதாது, அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும் பகைமேல் செல்லார்.' (தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி 'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து வருத்தமும் உறுவராகலின், இருப்பர் என்றார். இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக் குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற் காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.)ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து. 486 ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற இருப்பு, பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து - பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப் பின்னே கால் வாங்கும் தன்மைத்து. (உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால். பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு என்பது கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக் கூறப்பட்டது.)பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த் துள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487 ஒள்ளியவர் - அறிவுடைய அரசர், ஆங்கே பொள்ளெனப் புறம் வேரார் - பகைவர் மிகை செய்த பொழுதே விரைவாக அவரறியப் புறத்து வெகுளார், காலம் பார்த்து உள் வேர்ப்பர் - தாம் அவரை வெல்லுதற்கு ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும் உள்ளே வெகுள்வர். ('பொள்ளென' என்பது குறிப்பு மொழி. 'வேரார்' 'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார், அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம் வேரார்' என்றும் வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்' என்றும் கூறினார்.)
|