நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த தன்மையான் ஆளப் படும்.511 நன்மையும் தீமையும் நாடி - அரசன் முதற்கண் ஒருவினையைத் தன்கண் வைத்தால், அதன்கண் ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து அறிந்து, நலம் புரிந்த தன்மையான் - அவற்றுள் ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான், ஆளப்படும் - பின் அவனால் சிறந்த வினைகளிலே ஆளப்படும். (தன்னை உரிமை அறிதற் பொருட்டு அகம் புறங்கட்கு நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்தவழி, அதன்கண் ஆம் செயல்களையே செய்தவன் பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த' என்ற இறந்த காலத்தான், முன் உரிமை அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.)வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை. 512 வாரி பெருக்கி - பொருள்வரு வாயில்களை விரியச் செய்து, வளம் படுத்து - அப்பொருளால் செல்வங்களை வளர்த்து, உற்றவை ஆராய்வான் -அவ் வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற இடையூறுகளை நாள்தோறும் ஆராய்ந்து நீக்கவல்லவன், வினைசெய்க - அரசனுக்கு வினை செய்க. (வாயில்களாவன: மேல் இறை மாட்சியுள் 'இயற்றலும் ' (குறள்,385) என்புழி உரைத்தனவும், உழவு,பசுக்காவல், வாணிகம் என்னும் வார்த்தையுமாம். செல்வங்களாவன. ஆண்டுப் பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன. இடையூறுகளாவன: அரசன், வினை செய்வார், சுற்றத்தார்,பகைவர், கள்வர் என்று இவரான் வரும் நலிவுகள்.)அன்பறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும் நன்குடையான் கட்டே தெளிவு. 513 அன்பு - அரசன் மாட்டு அன்பும், அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவும், தேற்றம் - அவை செய்தற்கண் கலங்காமையும், அவா இன்மை - அவற்றால் பொருள் கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய, இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு - இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான் மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு. (இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற வினைக்கண் யாதும்ஆராய வேண்டுவதில்லை என்று அரசன் தெளிவதற்கு ஏதுஆகலின், அவனை, அதன் பிறப்பிடனாக்கிக் கூறினார். இவைமூன்று பாட்டானும் ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.)
|