பக்கம் எண் :

212
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்.
514
எனை வகையான் தேறியக் கண்ணும் - எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும், வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர். (கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.)

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென் றேவற்பாற் றன்று.

515
அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானையல்லது, வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று - வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று. ('செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.)

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோ
டெய்த உணர்ந்து செயல்.

516