செய்வானை நாடி - முதற் கண்ணே செய்வானது இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி - பின் செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து, காலத்தொடு எய்த உணர்ந்து செயல் - பின் அவனையும் அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து அவனை அதன்கண் ஆடலைச் செய்க. (செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும் மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான் செய்யின் இவ்வியல்பிற்றாய வினை முடியும் என்று கூட்டி உணர்தல்.) இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந் ததனை அவன்கண் விடல். 517 இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து - இவ்வினையை இக்கருவியால் இவன் முடிக்கவல்லவன் எனக்கூறுபடுத்து ஆராய்ந்து, அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள் இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக. (கருவி: துணைவரும் பொருளும் முதலாயின. வினை முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம் உண்டாதல் . விடுதல்: அதற்கு அவனை உரியனாக்குதல்.)வினைக்குரிமை நாடிய பின்றை அவனை அதற்குஉரிய னாகச் செயல். 518 வினைக்கு உரிமை நாடிய பின்றை - ஒருவனை அரசன் தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து துணிந்தால், அவனை அதற்கு உரியனாகச் செயல் பின் அவனை அதற்குரியனாமாறு உயரச்செய்க. (உயரச்செய்தலாவது : அதனைத் தானேசெய்து முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.)வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக நினைப்பானை நீங்கும் திரு. 519 வினைக்கண் வினை உடையான் கேண்மை - எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை, வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும். (கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர்செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக்கருதுமாயின், பின் ஒருவரும்உட்பட்டு முயல்வார் இல்லையாம் . ஆகவே, தன் செல்வம்கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானைஆளும் திறம் கூறப்பட்டது.)
|