பக்கம் எண் :

214
நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு.
520
வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது, மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க. (அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.)

அதிகாரம் 53. சுற்றம் தழால்

[ அஃதாவது , அரசன் தன் கிளைஞரைத் தன்னின் நீங்காமல் அணைத்தல். வினை செய்வாரைக் கூறி ஏனைச்சுற்றம் கூறுகின்றார் ஆகலின் , இது தெரிந்து வினையாடலின் பின் வைக்கப்பட்டது.]

பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

521
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் - ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாய வழியும் விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக் கொண்டாடும் இயல்புகள், சுற்றத்தார்கண்ணே உள - சுற்றத்தார்மாட்டே உள ஆவன. (சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப்படாமை விளக்கி நின்றது. பழைமை : பற்றறாக் காலத்துத் தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன் பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர் ஆகலின்,ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது. இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.)