விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா ஆக்கம் பலவும் தரும்.522 விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பு அறாத சுற்றம் ஒருவற்கு எய்துமாயின், அருப்பு அறா ஆக்கம் பலவும் தரும் - அஃது அவற்குக் கிளைத்தல் அறாத செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும். (உட்பகையின் நீக்குதற்கு 'விருப்புஅறாச் சுற்றம்' என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய செல்வத்தின் நீக்குதற்கு அருப்பு அறா ஆக்கம் என்றும், விசேடித்தார். தொடை நோக்கி விகார மாயிற்று. 'இயையின்' என்பது, அதனது அருமை விளக்கி நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர். பலவும் என்பது அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி வளர்த்தலின், அவை மேல்மேல் கிளைக்கும் என்பது கருத்து.)அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக் கோடுஇன்றி நீர்நிறைந் தற்று. 523 அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - அச்சுற்றத்தோடு நெஞ்சு கலத்தல் இல்லாதாவன் வாழ்க்கை, குளவளாக் கோடுஇன்றி நீர் நிறைந்தற்று -குளப்பரப்புக் கரையின்றி நீர் நிறைந்தாற்போலும். (சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக் கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான் வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகுபெயர்.'வாழ்க்கை' என்றதூஉம் அதற்கு ஏதுவாய செல்வங்களை. 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம் இல்லாதான்செல்வங்கள் தாங்குவார் இன்மையின் புறத்துப் போம் என்பதாம்.)சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன். 524 செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல். (பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும்தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால்செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பதுகூறப்பட்டது.)
|