பக்கம் எண் :

222

அதிகாரம் 55. செங்கோன்மை

[ அஃதாவது , அரசனால் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை ஒருபாற்கோடாது செவ்விய கோல் போறலின் ' செங்கோல் ' எனப்பட்டது. வடநூலாரும் , ' தண்டம் ' என்றார் . அது சோர்வில்லாத அரசனால் செயற்பாலது ஆகலின் , இது பொச்சாவாமையின் பின் வைக்கப்பட்டது .]

ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
541
ஓர்ந்து - தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால் அக்குற்றத்தை நாடி: யார்மாட்டும் கண்ணோடாது, இறை புரிந்து - நடுவு நிலைமையைப் பொருந்தி, தேர்ந்து - அக்குற்றத்திற்குச் சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து, செய்வஃதே முறை - அவ்வளவிற்றாகச் செய்வதே முறையாம். (நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை இறை என்றும் உயிரினும் சிறந்தார் கண்ணும் என்பார் 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை 'இறை' எனவும் , செய்வது 'செய்வஃது' எனவும் நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம் கூறப்பட்டது.)

வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.

542
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகா நிற்குமே எனினும், குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் - குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா நிற்கும். (நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக் 'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை என்பதாம்.)