பக்கம் எண் :

224
வேல்அன்று வென்றி தருவது மன்னவன்
கோல்அதூஉம் கோடா தெனின்.
546
மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின். (கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க)

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

547
வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை எல்லாம் அரசன் காக்கும், அவனை முறை காக்கும் - அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும், முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும் முட்டாமல் செலுத்துவனாயின். (முட்டாமல் செலுத்தியவாறு: மகனை முறைசெய்தான் கண்ணும்(சிலப் 20:53-55 ) தன் கை குறைத்தான் கண்ணும் (சிலப்,23: 42-53)காண்க. 'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால் தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச் செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.)

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

548
'எண்பதத்தான்' ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர் சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து, நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன், தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே நின்று தானே கெடும். (எண்பதத்தான் என்னும் முற்று வினை எச்சமும் 'ஓரா' என்னும் வினை எச்சமும், செய்யா என்னும் பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை கொண்டன.