அதிகாரம் 56. கொடுங்கோன்மை [ அஃதாவது , அம்முறையினது கோடுதல் தன்மை . ஈண்டும் உவமையின் பெயர் பொருள்மேல் ஆயிற்று .செங்கோன்மைக்கு மாறு ஆகலின் , இஃது அதன்பின் வைக்கப்பட்டது.] கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்தொழுகும் வேந்து. 551 கொலை மேற்கொண்டாரின் கொடிது - பகைமை பற்றிக் கொல்லுதல்தொழிலைத் தம்மேற்கொண்டு ஒழுகுவாரினும் கொடியன், அலைமேற்கொண்டு அல்லவை செய்து ஒழுகும்வேந்து - பொருள்வெஃகிக் குடிகளை அலைத்தல் தொழிலைத் தன்மேற் கொண்டு முறைஅல்லவற்றைச் செய்து ஒழுகும் வேந்தன். (அவர் செய்வது ஒருபொழுதைத் துன்பம், இவன் செய்வது எப்பொழுதும்துன்பமாம் என்பதுபற்றி, அவரினும் கொடியன் என்றார். பால்மயக்கு உறழ்ச்சி .'வேந்து' என்பது உயர்திணைப்பொருட்கண் வந்த அஃறிணைச் சொல். 'அலை கொலையினும் கொடிது'என்பதாயிற்று.) வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு.552 வேலொடு நின்றான் - ஆறலைக்கும் இடத்துத்தனியே வேல் கொண்டு நின்ற கள்வன், இடு என்றது போலும் - ஆறுசெல்வானை 'நின் கைப்பொருள் தா' என்று வேண்டுதலோடுஒக்கும், கோலொடு நின்றான் இரவு - ஒறுத்தல் தொழிலோடு நின்றஅரசன் குடிகளைப் பொருள் வேண்டுதல். ('வேலொடு நின்றான்' என்றதனால் பிறரொடு நில்லாமையும், 'இரவு' என்றதனால்இறைப்பொருள் அன்மையும் பெற்றாம், தாராக்கால்ஒறுப்பல் என்னும் குறிப்பினன் ஆகலின் இரவாற் கோடலும் கொடுங்கோன்மைஆயிற்று,இவை இரண்டு பாட்டானும் கொடுங்கோன்மையதுகுற்றம் கூறப்பட்டது.) நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும். 553 நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும். (அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது.இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)
|