பக்கம் எண் :

228

தாமும் மன்னார் என்பதாயிற்று.வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின்,பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மைஇல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும்கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.)

துளியின்மை ஞாலத்திற் கெற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
557
'துளி' இன்மை ஞாலத்திற்கு எற்று - மழை இல்லாமை வையத்து வாழும் உயிர்கட்கு எவ்வகைத் துன்பம் பயக்கும், அற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு - அவ்வகைத் துன்பம் பயக்கும் அரசன் தண்ணளியில்லாமை அவன் நாட்டு வாழும் குடிகட்கு. (சிறப்புப்பற்றி 'துளி' என்பது மழைமேல் நின்றது. 'உயிர்' என்பது குடிகள்மேல் நின்றது.மேல் 'வான் நோக்கி வாழும்' என்றதனை எதிர்மறை முகத்தால் கூறியவாறு.)

இன்மையின் இன்னா துடைமை முறைசெய்யா
மன்னவன் கோல்கீழ்ப் படின்.

558
முறை செய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் - முறை செய்யாத அரசனது கொடுங்கோலின்கீழ் வாழின், இன்மையின் உடைமை இன்னாது - யாவர்க்கும் பொருளினது இன்மையினும் உடைமை இன்னாது. (தனக்குரிய பொருளோடு அமையாது மேலும் வெஃகுவோனது நாட்டுக் கைந்நோவயாப்புண்டல் முதலிய வருவது பொருளுடையார்க்கே ஆகலின், அவ்வுடைமை இன்மையினும் இன்னாதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டு வாழ்வார்க்கு வரும் குற்றம் கூறப்பட்டது.)

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.

559
மன்னவன் முறை கோடிச் செய்யின் - மன்னவன் தான் செய்யும் பொருளை முறை தப்பச் செய்யுமாயின், உறைகோடி வானம் பெயல் ஒல்லாது - அவன் நாட்டுப் பருவமழை இன்றாம் வகை மேகம் பொழிதலைச் செய்யாது. (இரண்டிடத்தும் 'கோட' என்பன திரிந்து நின்றன. உறைகோடுதலாவது பெய்யும் காலத்துப் பெய்யாமை. அதற்குஏது, வருகின்ற பாட்டான் கூறுப.)