ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின்.560 காவலன் காவான் எனின் - காத்தற்குரிய அரசன் உயிர்களைக் காவானாயின், ஆ பயன் குன்றும் - அறன் இல்லாத அவன் நாட்டுப் பசுக்களும் பால் குன்றும், அறு தொழிலோர் நூல் மறப்பர் - அந்தணரும் நூல்களை மறந்துவிடுவர். (ஆ பயன்: ஆவாற்கொள்ளும் பயன். அறுதொழிலாவன: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என இவை. பசுக்கள் பால் குன்றியவழி அவியின்மையானும், அது கொடுத்தற்குரியார் மந்திரம் கற்பம் என்பன ஓதாமையானும், வேள்வி நடவாதாம்; ஆகவே, வானம் பெயல் ஒல்லாது என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும் அவன் நாட்டின்கண் நிகழும் குற்றம் கூறப்பட்டது.) அதிகாரம் 57. வெருவந்த செய்யாமை[ அஃதாவதுகுடிகள் அஞ்சுவதும் , பகுதி அஞ்சுவதும் தான் அஞ்சுவதும் ஆயதொழில்களைச் செய்யாமை . அவை செய்தல் கொடுங்கோன்மைப் பாற்படுதலின் , இஃது அதன்பின் வைக்கப்பட்டது.]
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங் கொறுப்பது வேந்து. 561 'தக்காங்கு' நாடி - ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து: தலைச்செல்லா வண்ணத்தால் 'ஒத்தாங்கு' ஒறுப்பது வேந்து - பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான். (தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 'தகுதி என்பது நடுவுநிலைமையாதல் 'தகுதி என ஒன்றும் நன்றே' (குறள் 111 ) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.)
|