பக்கம் எண் :

23
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
30

எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகலான் - எல்லா உயிர்கள் மேலும் செவ்விய தண்ணளியைப் பூண்டு ஒழுகலான்; அந்தணர் என்போர் அறவோர் - அந்தணரென்று சொல்லப்படுவார் துறவறத்தில் நின்றவர். (பூணுதல் விரதமாகக் கோடல். 'அந்தணர்' என்பது அழகிய தட்பத்தினை உடையார் என ஏதுப்பெயர் ஆகலின், அஃது அவ்வருளுடையார் மேலன்றிச் செல்லாது என்பது கருத்து. அவ்வாறு ஆணையுடையாராயினும் உயிர்கண்மாட்டு அருளுடையர் என்பது இதனால் கூறப்பட்டது. 

அதிகாரம்.4. அறன் வலியுறுத்தல்


(அஃதாவது, அம்முனிவரான் உணர்த்தப்பட்ட அம்மூன்றனுள் ஏனைப் பொருளும் இன்பமும் போலாது, அறன் இம்மை மறுமை வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான், அவற்றின் வலியுடைத்து என்பது கூறுதல். அதிகார முறைமையும் இதனானே விளங்கும். 'சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் அறத்துவழிப் படூஉம் தோற்றம் போல'(புறநா.31) என்றார் பிறரும்.)

சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

31

சிறப்பு ஈனும் - வீடுபேற்றையும் தரும்; செல்வமும் ஈனும் - துறக்கம் முதலிய செல்வத்தையும் தரும்; உயிர்க்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் ஊங்கு ஆக்கம் எவன் - ஆதலான் உயிர்கட்கு அறத்தின் மிக்க ஆக்கம் யாது? (எல்லாப் பேற்றினும் சிறந்தமையின், வீடு 'சிறப்பு' எனப்பட்டது. ஆக்கம் தருவதனை 'ஆக்கம்' என்றார். ஆக்கம் : மேன் மேல் உயர்தல், ஈண்டு 'உயிர்' என்றது மக்கள் உயிரை, சிறப்பும் செல்வமும் எய்துதற்கு உரியது அதுவே ஆகலின். இதனால் அறத்தின் மிக்க உறுதி இல்லை என்பது கூறப்பட்டது.