இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச் சீறின் சிறுகும் திரு.568 இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் - காரியத்தைப்பற்றி வந்த எண்ணத்தை அமைச்சர்மேல் வைத்து அவரோடு தானும் எண்ணிச் செய்யாத அரசன், சினத்து ஆற்றிச் சீறின் - அப்பிழைப்பால் தன் காரியம் தப்பியவழித்தன்னைச் சினமாகிய குற்றத்தின் கண்ணே செலுத்தி அவரை வெகுளுமாயின், திருச்சிறுகும் - அவன் செல்வம் நாள்தோறும் சுருங்கும். (அரசர் பாரம் பொறுத்துய்த்தல் ஒப்புமையான் அமைச்சரை 'இனம்' என்றும், தான் பின்பிழைப்பாதால் அறிந்து அமையாது, அதனை அவர்மேல் ஏற்றி வெகுளின் அவர் வெரீஇ நீங்குவர், நீங்கவே,அப்பிழைப்புத் தீருமாறும் அப்பாரம் இனிது உய்க்கு மாறும் இலனாம் என்பது நோக்கி, 'திருச் சிறுகும்' என்றும் கூறினார். இதனான் பகுதி அஞ்சும் வினையும், அது செய்தான் எய்தும் குற்றமும் கூறப்பட்டன.)செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும். 569 சிறை செய்யா வேந்தன் - செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண்செய்து கொள்ளாத அரசன் செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும். (பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவி் அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.)
|